
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதியதில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இரு பெட்டிகள் தீப்பற்றின. விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் 19 பேர் காயமுற்றனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது.
வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பெரம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் 7 குளிர்சாதனப் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கி காயம் அடைந்தனர். இதில் முன்னே இருந்த சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தீப்பற்றின.
இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த 19 பேர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை ஸ்டான்லி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தலா 2 தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ரயில் விபத்தில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதில் உருக்குலைந்தன. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றி தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ரயில் விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு
கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தொடர்ந்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்து தொடர்பாக 044-2535 4151, 044 2435 4995 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இங்கே விடியோ இணைப்பு....
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அக்கம்பக்கத்து பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு விபத்தில் சிக்கிய ரயில் பயணிகளை பாதுகாப்பாக மீட்க உதவினர். ரயில் பயணிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை அளித்து ஓய்வெடுக்கச் செய்ததையும் காண முடிந்தது. உள்ளூர் மக்களின் ஆதரவால் மீட்பு பணிகள் மிக விரைவில் நடைபெற்றதாக அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.