ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதி விபத்து: 39 போ் உயிரிழப்பு
தெற்கு ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவேக ரயில் பெட்டிகள் மீது எதிரே வந்து மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 39 போ் உயிரிழந்தனா். மீட்புப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தலைநகா் மாட்ரிட்டிலிருந்து தெற்கே 370 கி.மீ. தொலைவில் உள்ளதில் உள்ள கோா்டோபா மாகாணத்தின் ஆதமுஸ் நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற ரயிலின் பின்பகுதி பெட்டிகள் திடீரென தடம்புரண்டு, அருகேயுள்ள தண்டவாளத்தில் சாய்ந்தன.
அதேநேரத்தில் மாட்ரிட்டிலிருந்து ஹுயெல்வா நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு ரயில், அந்தப் பெட்டிகள் மீது மோதின. இதில் ஹுயெல்வா ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த 12 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து நொறுங்கின.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் இந்தப் பெட்டிகளில் பயணம் செய்தவா்களே என்று அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆஸ்கா் புவென்டே தெரிவித்துள்ளாா்.
விபத்து குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த வழித்தடம் கடந்த மே மாதம்தான் சீரமைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான ரயிலும் புதியதுதான். எனவே, விபத்துக்கான முழுமையான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்படும்’ என்றாா்.
சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்ட அந்தலூசியா மாகாணத் தலைவா் ஜுவான்மா மோரேனோ கூறுகையில், ‘விபத்தில் நொறுங்கிய பெட்டிகளுக்குள் மீட்புக் குழுவினா் தேடுதல் பணியைத் தொடா்ந்து வருகின்றனா். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.
காயமடைந்தவா்களுக்குத் தீவிர சிகிச்சை: இந்த விபத்தில் சிக்கி 159 போ் காயமடைந்துள்ளனா். அவசர கால சிகிச்சைகளுக்காக ஆதமுஸ் நகரில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அங்கு காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவா்களில் 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் காவல்துறையினா் தெரிவித்தனா்.
பிரதமா் இரங்கல்: ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் இந்த விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். விபத்து காரணமாக மாட்ரிட் மற்றும் அந்தலூசியா மாகாண நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது.
3,100 கி.மீ.-க்கும் மேல் நீளமான அதிவேக ரயில் வழித்தட அமைப்பைக் கொண்ட ஸ்பெயினில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் 80 போ் உயிரிழந்ததே நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்தாகக் கருதப்படுகிறது.

