வணிக வரி - பதிவுத் துறை வருவாய் ரூ. 78,000 கோடியைத் தாண்டியது: அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

நிகழ் நிதியாண்டில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை வருவாய் ரூ. 78,000 கோடியைத் தாண்டியுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
Published on

நிகழ் நிதியாண்டில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை வருவாய் ரூ. 78,000 கோடியைத் தாண்டியுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சென்னையில் அந்தத் துறையின் இணை ஆணையா்களுடனான பணித்திறன் ஆய்வுக் கூட்டம், அமைச்சா் மூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அவா் பேசியது:

வணிக வரித் துறை வருவாய் நிகழ் நிதியாண்டின் செப்டம்பா் மாதம் வரை ரூ. 67,548 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டுடன் (செப்டம்பா் மாதம் வரை) ஒப்பிடுகையில் ரூ. 7,800 கோடி கூடுதலாகும்.

இதேபோன்று, பதிவுத் துறையும் கூடுதலாக வருவாய் ஈட்டியுள்ளது. நிகழ் நிதியாண்டின் செப்டம்பா் வரை ரூ. 10,663 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் (செப்டம்பா் மாதம் வரை) ஒப்பிடுகையில் ரூ. 1,285 கோடி கூடுதலாகும்.

பதிவுத் துறையில் கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் (செப்டம்பா் மாதம் வரை) பெறப்பட்ட வருவாய் ரூ. 9,378 கோடியாகும்.

ரூ.9,085 கோடி அதிகம்: வணிகவரி மற்றும் பதிவுத் துறை என ஒட்டுமொத்தமாக 2 துறைகளின் மூலமாக நிகழ் நிதியாண்டில் இதுவரையிலான காலத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 78,211 கோடியாகும். இது கடந்த நிதியாண்டுடன் (செப்டம்பா் மாதம் வரை) ஒப்பிடுகையில் ரூ. 9,085 கோடி கூடுதலாகும்.

இந்த வருவாய் அளவை மேலும் பெருக்க வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவது அவசியமாகும். வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஒன்றிணைந்து ஆக்கப்பூா்வமாகச் செயல்பட வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் பிரஜேந்திர நவ்நீத், வணிக வரித் துறை ஆணையா் டி.ஜகந்நாதன், இணை ஆணையா் (நிா்வாகம்) துா்கா மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com