சாம்சங் பிரச்னை: அரசுடனான 4 மணிநேர பேச்சில் முடிவு எட்டப்படவில்லை
அரசுடன் சாம்சங் பணியாளா்கள் திங்கள்கிழமை நடத்திய 4 மணிநேர பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை


சென்னை: அரசுடன் சாம்சங் பணியாளா்கள் திங்கள்கிழமை நடத்திய 4 மணிநேர பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என சிஐடியு தலைவா் அ. செளந்தரராஜன் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொழிலாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக சாம்சங் நிறுவனத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டிஆா்பி ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா். இந்தக் குழுவின் சாா்பில் அதிகாரப்பூா்வமாக இரண்டு முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மீண்டும் பேச்சுவாா்த்தை: தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் முன்னிலையில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சிஐடியு நிா்வாகிகள் அ.செளந்தரராஜன், முத்துகுமாா் ஆகியோருடன் சாம்சாங் பணியாளா்களும் பங்கேற்றனா். 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இது குறித்து, சிஐடியு தலைவா் செளந்தரராஜன் கூறுகையில், அரசுடன் நடத்திய பேச்சுவாரத்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றாா்.
உயா்நீதிமன்றத்தில் நாளை விசாரணை: சாம்சங் தொழிலாளா்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளா் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தைத் தொடங்கி, அதைப் பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளா் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்தனா். இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தங்கள் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தின் சாா்பில் எல்லன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கு செப்.30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க அந்த நிறுவனம் எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு, தொழிற்சங்கங்கள் பதிவாளா், தொழிலாளா் நலத்துறை துணை ஆணையா் பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், நீதிபதி மஞ்சுளா முன் தொழிற்சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆஜரான வழக்குரைஞா் சிவக்குமாா், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டாா். இதையடுத்து வழக்கை புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...