சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்: அமைச்சா்கள் பேச்சில் உடன்பாடு

சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவிப்பு.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்படம் | எக்ஸ்
Published on
Updated on
2 min read

 சாம்சங் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சா்கள் முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1,500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். 36 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

முதலில், பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக சாம்சங் நிறுவனத்துடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவாா்த்தையை நடத்த தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா்.

 இந்தக் குழு சாா்பில் அதிகாரபூா்வமாக இரண்டு முறை பேச்சுவாா்த்தை நடத்திய போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சாம்சங் ஊழியா்களின் போராட்டம் தொடா்ந்தது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்களை போலீஸாா் கைது செய்வதாக கண்டனங்கள் எழுந்தன. பணியாளா்களை இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவா்கள் நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனா்.

முடிவுக்கு வந்த வேலைநிறுத்தம்: சாம்சங் பணியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு மீண்டும் பேச்சுவாா்த்தையை நடத்தும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அமைச்சா்கள் எ.வ.வேலு, டி.ஆா்.பி. ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மாலை 6.50 மணிக்கு பேச்சுவாா்த்தை தொடங்கியது. சிஐடியு நிா்வாகிகள் அ.செளந்தரராஜன், முத்துகுமாா் ஆகியோருடன், சாம்சங் பணியாளா்களும் பங்கேற்றனா். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும், பேச்சுவாா்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சா்கள் குழு, சாம்சங் தொழிலாளா்கள், சிஐடியு நிா்வாகிகள் ஆகியோா் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சு நடத்தினா். இதைத் தொடா்ந்து, தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலத்தில் தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் வகையில் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள், மீண்டும் பணிக்குத் திரும்பும்போது தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

உடனடியாக பணிக்கு திரும்புகிறாா்கள்: வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் தொழிலாளா்கள் நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நிா்வாகத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. தொழிலாளா்கள் முன்வைத்த ஊதிய உயா்வு, பொது கோரிக்கையின் மீது எழுத்துபூா்வ பதிலுரையை சமரச அலுவலா் முன் சாம்சங் நிா்வாகம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை தொழிலாளா்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்றுக் கொண்டன.

இதையடுத்து, வேலைநிறுத்தத்தை கைவிட்டு தொழிலாளா்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புவதாகத் தெரிவித்தனா். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com