ரூ. 9,000 சம்பளம் பெறும் தொழிலாளிக்கு ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி விதிப்பு! என்னதான் நடக்கிறது?

58 வயது கூலித் தொழிலாளிக்கு ரூ. 2.30 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்
ஜிஎஸ்டி சுற்றறிக்கையுடன்  ராணி பாபுவும் அவரது மகனும்
ஜிஎஸ்டி சுற்றறிக்கையுடன் ராணி பாபுவும் அவரது மகனும்படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Published on
Updated on
2 min read

58 வயது முதிர்ந்த பெண் கூலித் தொழிலாளிக்கு, ’ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்’ என வணிக வரித் துறையிடமிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து வரும் ராணி பாபு(58) என்ற பெண்மணிக்கு, சரக்கு மற்றும் சேவை வரியாக(ஜிஎஸ்டி) ரூ. 2.39 கோடி செலுத்துமாறு திருச்சி தலைமை அலுவலகத்துக்குள்பட்ட பாலக்கரை வணிக வரித் துறை அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனது பேரக்குழந்தைகளுடன் கிருஷ்ணாவரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராணி பாபு. ராணி பாபுவின் மாத சம்பளமோ ரூ. 9,000 மட்டுமே. அப்படியிருக்கையில், ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி தொகை செலுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது?

அவருடைய மகன் சங்கர்(40) காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவருக்கும் குறைவான சம்பளமே.

ஆனால், வணிக் வரித் துறையின் அறிக்கையின்படி, திருச்சி அருகேயுள்ள வடக்கு கள்ளிக்குடியில் இயங்கி வரும் ‘மாடர்ன் எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளராக ராணி பாபுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களுக்கு ஜிஎஸ்டி குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திருப்பத்தூரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்க உள்ளதாக ராணி பாபுவும் அவரது மகனும் தெரிவித்துள்ளனர்.

என்னதான் நடந்தது?

ஜிஎஸ்டி விவகாரத்தில் நிலவும் குழப்பத்தால் ராணி பாபு மட்டும் பாதிக்கப்படவில்லை. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த சாமானிய மக்கள் பலரது ஆதார், பான் அட்டைகள் உள்பட தினக்கூலித் தொழிலாளிகள், இலத்தரசிகள் ஆகியோரின் வங்கி கணக்குகள் மோசடி செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், இப்பகுதிகள் மற்றும் பிற பகுதிகளிலும், பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் நிறுவனங்கள், ஜிஎஸ்டி தாக்கல் செய்யாமல் வரி ஏய்ப்பு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிடம் வினவியபோது, “மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சைபர் குற்றப்பிரிவுடன் இணைந்து இந்த வழக்குகளை விசாரித்து வருவதாக” தெரிவித்துள்ளார்.

”ராணி பாபு விவகாரத்தில் இதுவரை புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. புகார் அளிக்கப்பட்டதும் விசாரணை தொடங்கப்படும். இதுபோன்ற பிற வழக்குகளிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றுள் சில வழக்குகள், 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவானவை. இதன் காரணமாக, விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

மேற்கண்ட ஒரு வழக்கில், 50 பேருக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த மோசடி செயல்கள் எல்லாம், பல பேரால் இணைந்து மேற்கொள்ளப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரே மாதத்தில் ஒரு வழக்கின் விசாரணை முடிவுக்கு வரும்” என்றார்.

மாவட்ட சைபர் க்ரைம் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் பகிர்ந்துள்ள தகவலின்படி, “இந்த வழக்குகளில் விசாரணை மேற்கொள்வதில் சிக்கல்கள் பல உள்ளன. வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை தனிப்பட்ட பல நபர்களுக்கு(சாமானிய மக்கள்) சொந்தமானதாக தெரிய வந்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினர், பணத்தை பெற்றுக் கொண்டு தாமாகவே முன்வந்து தங்கள் சுய விவரங்களை வழங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஓரிரு வழக்குகளில், மக்களிடமிருந்து தனிப்பட்ட விவரங்களை வாங்கிக்கொண்ட நபர்கள், அவர்களின் பெயர்களையும் இணைத்து தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். அப்படி தொடங்கப்படும் நிறுவனங்கள், நஷ்டமடையும்போது, மேற்கண்ட மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கு கிடைப்பதில்லை. அப்போதுதான் அவர்கள் புகாரளிக்க வருகின்றனர்” என்றார்.

இதுபோன்ற குற்றங்கள் ஏன் நடைபெறுகின்றன?

சமூக நலத் திட்டங்கள் மூலம் பணம் அளிக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை அளிப்போரை நம்பி, ராணியை போன்ற சாமானிய மக்கள் பணபலன் பெறுவதற்காக தங்களுடைய சுய விவரங்களை கொடுத்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கும் அதிகாரிகள், ஜிஎஸ்டி பதிவு முறை முழுவதுமாக இணைய வழியிலான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தரவுகளை யார் வேண்டுமானாலும் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சாமானிய மக்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய அரசு ஆவணங்களான ஆதார், பான் அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கவனமாகக் கையாள்வது அவசியம் என்பதையே மேற்கண்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com