வேலூரில் கைதி சித்ரவதை: டிஐஜி, 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தது பற்றி...
வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான்
வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான்din
Published on
Updated on
1 min read

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் சரக சிறைத்துறை முன்னாள் டிஐஜி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 30) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைகள் செய்வதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருள்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

அதன்பேரில் சிபிசிஐடி போலீசார், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில், கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதியான நிலையில் ஆயுள்தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல்-2 சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக அங்கு பணியாற்றிய பரசுராமன், வேலூர் சிறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, இந்த வழக்கில் உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், வேலூர் சரக முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.