திருவேற்காடு: குப்பைக் கிடங்கால் சுகாதாரக் சீர்கேடு

திருவேற்காடு நகராட்சி, கோலடி பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவேற்காடு- கோலடி சாலையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.
திருவேற்காடு- கோலடி சாலையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.
Published on
Updated on
2 min read

திருவேற்காடு நகராட்சி, கோலடி பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவேற்காடு சிறப்புநிலை நகராட்சியில் 18 வார்டுகளில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிகின்றனர். இங்கு புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலும் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிக குப்பை உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தினந்தோறும் உருவாகும் குப்பைகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மூலம் 250 டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என்று தரம் பிரித்து, மக்கும் குப்பை இயற்கையான முறையில் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மிக குறைந்த அளவில் மக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது.

பிரிக்க முடியாத குப்பைகள் 3-ஆவது வார்டு கோலடி பகுதியில் நெடுஞ்சாலையின் ஓரம் எரிவாயு தகன மேடை அருகே மலைபோல் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் கொட்டும் இடத்தில் மின் உயர் கோபுரம் உள்ளது. இதன் உயர் அழுத்த மின்சார கம்பிகளை தொடும் அளவிற்கு தற்போது குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக் கொண்டு கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியினர் கூறுகையில், பல ஆண்டுகளாக இங்கு குப்பை கொட்டப்படுவதால், அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. மேலும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

திருவேற்காடு நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனராம். மேலும் குப்பைக் கிடங்கைச் சுற்றிலும் பிளிச்சிங் பவுடர், கிரிமி நாசினி மருந்து தெளிப்பதும் இல்லை. இந்த கிடங்கில் இருந்து குப்பைகளை தினந்தோறும் 3 லாரிகளில் செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் குப்பைகளை எடுத்து செல்லாததால், மலை போல் குப்பைகள் தேங்கி உள்ளது.

நம் குப்பை- நம் பொறுப்பு, நமது சுகாதாரம் என்று நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் பல ஆண்டுகளாக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒட்டு மொத்த குப்பைகளையும் ஒரே இடத்தில் மலைபோல் குவித்துவிட்டு, நோய் பரவும் சூழலை நகராட்சி நிர்வாகமே உருவாக்கி வருகிறது. எனவே திருவேற்காடு குப்பைக் கிடங்கில் இருந்து மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி சுகாதாரத்தை பேண வேண்டும் என்றனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி கூறியது:

குப்பைக் கிடங்கில் இருந்து திங்கள்கிழமை (அக். 28) முதல் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தினமும் 10 லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு, ஆப்பூரில் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். 15 நாள்களுக்குள் அனைத்துக் குப்பைகளும் கிடங்கில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com