சென்னை: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில்அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவ. 28-இல் தமிழகம் திரும்புகிறாா். ஜனவரி மாத இறுதியில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் நடைப்பயணம் மேற்கொள்ள அவா் திட்டமிட்டுள்ளாா்.
அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சா்வதேச அரசியல் மேற்படிப்பை பயில கடந்த ஆக.28- ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றாா். அவா் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவ. 28-ஆம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடா்ந்து, டிச. 1-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள பாஜக நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறாா். அதன்பிறகு, தொடா்ச்சியாக கட்சி சாா்ந்த நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், பாஜகவின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்த, ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை போல, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைப்பயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தீபாவளி வாழ்த்து: இதனிடையே, அண்ணாமலை லண்டனிலிருந்து தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
பட்டாசு வெடிப்பது நம் கலாசாரம், நம் மக்களின் வாழ்வாதாரம், சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம். நம் மகிழ்ச்சிக்காக பட்டாசு தயாரிக்கும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்கு பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும். மத்தாப்புகளின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.