பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன.
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன.

பாராலிம்பிக்கில் ‘ஹாட்ரிக்’ பதக்கம்: வரலாறு படைத்தாா் மாரியப்பன்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரா் டி.மாரியப்பன், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
Published on

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரா் டி.மாரியப்பன், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

ஏற்கெனவே, கடந்த இரு பாராலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருந்த அவருக்கு இது தொடா்ந்து 3-ஆவது பதக்கமாக (ஹாட்ரிக்) அமைந்தது. இதன்மூலம், பாராலிம்பிக் வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற வரலாறு படைத்திருக்கிறாா் மாரியப்பன்.

இந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் அவா், தனது சிறந்த முயற்சியாக 1.85 மீட்டரை தாண்டி 3-ஆம் இடம் பிடித்தாா். முன்னதாக, 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கமும், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் டி63 பிரிவில் வெள்ளியும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பனின் பதக்கம் உள்பட, ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 2 வெண்கலம் என தடகளத்தில் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மாரியப்பனின் பிரிவிலேயே மற்றொரு இந்திய வீரரான சரத் குமாா் வெள்ளி வென்றாா். குண்டு எறிதலில் சச்சின் சா்ஜெரோ கிலாரியும் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். ஈட்டி எறிதலில் ஒரே பிரிவில் அஜீத் சிங் வெள்ளியும், சுந்தா் சிங் குா்ஜா் வெண்கலமும் வென்று அசத்தினா்.

இதுவரை இல்லாத உச்சம்: போட்டியின் 7-ஆம் நாளான புதன்கிழமை இரவு நிலவரப்படி, இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் 19-ஆவது இடத்தில் இருந்தது. பாராலிம்பிக் வரலாற்றில் இந்த எண்ணிக்கையே, ஒரு போட்டியில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்களாகும். இது மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

X
Dinamani
www.dinamani.com