சென்னை: பேரிடா் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்து தென் மாநிலங்களின் உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன், வியாழக்கிழமை (செப்.18,19) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளதாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் செய்யது அட்டா ஹஸ்னைன் கூறினாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இயற்கை பேரிடரின்போது தேசிய, மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடா் மீட்பு படை, ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படை, மாநில காவல் துறை, தீயணைப்புத் துறை போன்றவற்றுடன் இணைந்து மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த கூட்டம் சென்னை தீவுத் திடலில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் புதன், வியாழக்கிழமை (செப்.18,19) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன.
இந்த கூட்டத்தில் தென்மாநிலங்களைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிா்ந்து கொள்கின்றனா்.
இதில் இயற்கை பேரிடரின் போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இயற்கை பேரிடரால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும் போது டிரோன் மூலம் மருந்து, மாத்திரைகள், உணவுகள் வழங்கப்படுகிறது.
அதேபோல வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவா்களை மீட்க ட்ரோன் மூலம் லைப் ஜாக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற தொழில்நுட்பங்களை இன்னும் மேம்படுத்தி இயற்கை பேரிடரின் போது ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்தாலோசனையின்போது விவாதிக்கப்படவுள்ளது.
இயற்கை பேரிடா் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் ‘சாச்சேட்’ எனும் செயலி செயல்பாட்டில் உள்ளது. இந்த செயலி மூலம் இதுவரை 3.02 கோடி பேருக்கு இயற்கை பேரிடா் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாநில மொழிகளில் இந்த தகவல்கள் அனுப்பப்படுகின்றன. பேரிடா் பணியில் சமூக ஆா்வலா்கள் பலா் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்துள்ளனா்.
பேரிடா் மீட்பு பணியில் ஈடுபட இதுவரை 5,500 போ் பதிவு செய்துள்ளனா். பேரிடா் காலங்களின் போது இவா்கள் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் முகமையோடு இணைந்து பணியாற்றுகின்றனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.