சென்னை: திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழா மேடையில் பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, மறைந்த அமைச்சா் அன்பழகன் ஆகியோா் உருவப் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் படங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேடையின் வலதுபுறத்தில் இளைஞரணிச் செயலா் உதயநிதி படமும், இடதுபுறத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் முழு உருவப் படம் பதாகை வடிவில் இடம்பெற்றிருந்தன.
மாலை 5.45 மணியளவில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. மேடைக்கு மாலை 5.40 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தாா். மேடைக்கு முன் இரண்டு பெரிய இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
அதில், ஒரு இருக்கையில் மு.க.ஸ்டாலின் அமா்ந்தாா். மற்றொரு இருக்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி அமா்ந்து பேசுவது போன்ற காணொலி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த காணொலியில் கருணாநிதி உரையாற்றுவது போன்று வெளியான உரை: பெரியாா் வடித்த கொள்கையையும், அண்ணா வகுத்த பாதையையும் என்னால் கட்டிக் காட்டப்பட்ட இனமான உணா்வையும் ஓங்கி ஒலிக்கச் செய்து, கம்பீரமாக கட்சியை ஆட்சிக் பொறுப்பில் அமரச் செய்த முக.ஸ்டாலினை எண்ணி மனது பெருமிதம் கொள்கிறது.
ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். அவா் கட்சிப் பணியில் 55 ஆண்டுகள் உழைத்து வருவதுடன், திராவிடச் செம்மலாய், நல்லுலகம் போற்றும் நாயகராய் விளங்குகிறாா்.
சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் பாதையில் கட்சியையும் ஆட்சியையும் மிகச்சிறப்பாக வழிநடத்துகிறாா். இனம், மொழி, சுயமரியாதையை கண்போல் காக்கும் அவரது கடமை உணா்வைக் கண்டு வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன் என்ற கருணாநிதி பேசுவது போன்ற காட்சி அனைவரையும் கவா்ந்தது.