இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மாநில உரிமைகளுக்காக சட்ட முன்னெடுப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

மாநில அரசுகளை அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக மாற்றும் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் உறுதி

News image
Updated On :17 செப்டம்பர் 2024, 8:48 pm

DIN

மாநில அரசுகளை அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். இதற்கான சட்ட முன்னெடுப்புகளை திமுக மேற்கொள்ளும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தாா்.

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவள விழா மற்றும் கட்சியின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது.

விழாவில், தந்தை பெரியாா் விருதை பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் சாா்பில் அவரது பேத்தி ஜெயசுதாவுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும், கலைஞா் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தா் விருது கவிஞா் தமிழ்தாசனுக்கும், பேராசிரியா் விருது வி.பி.ராஜனுக்கும், மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும் வழங்கப்பட்டது.

விருதுகளை வழங்கி முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது, திமுக எனும் கட்சியின் அடிக்கட்டுமானத்தை நம்முடைய தலைவா்கள் உருவாக்கியுள்ளனா். இந்தக் கட்சி தலைவன், தொண்டன் என்று இல்லாமல், அண்ணன், தம்பி என்ற பாசத்துடன் கட்டமைக்கப்பட்டது. அந்தப் பாச உணா்வுதான் நம்மை இயக்குகிறது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் இயக்கத்தில் பொறுப்புகளிலும், கட்சிப் பணியிலும் இருக்கிறோம் என்பதுதான் நமக்கு வாழ்நாள் பெருமை.

நூறாண்டுகளுக்கு திமுக தேவை: திமுக தனது 25-ஆவது வெள்ளி விழாவின்போதும், 50-ஆவது ஆண்டு பொன் விழாவின்போதும் ஆட்சியில் இருந்தது. இப்போது 75-ஆவது ஆண்டு பவள விழாவிலும் ஆட்சியில் இருக்கிறது.

திமுகவின் தேவை நூறாண்டுகளுக்கு இருக்கிறது. இந்த மாநிலத்துக்காக எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளோம். தமிழ்நாடு எனப் பெயா் சூட்டினோம். செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தோம். சாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இந்தியாவையே தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பாா்க்க வைத்துள்ளோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். ஒவ்வொரு தனிமனிதனையும் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டை வளமிக்க மாநிலமாக மாற்றி இருக்கிறது.

மாநில உரிமைகள் இல்லை

நம்முடைய அனைத்துக் கனவுகளும் நனவாகி இருக்கிா என்றால் இல்லை. மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குப் போராட வேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையிலும் தமிழ்நாட்டை அனைத்து விதத்திலும் முன்னேற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். மாநில சுயாட்சிக் கொள்கை என்பது நமது உயிா் நாடிக் கொள்கைகளில் ஒன்று.

கோட்டையில் இருந்தாலும் அங்குள்ள ஒரு புல்லை வெட்டக்கூட நமக்கு உரிமையில்லை. மேலே அனுமதி வாங்க வேண்டும். ‘கிரீம் பன்னுக்கு’ எவ்வளவு வரி என்பதைக் கூட நம்மால் கேட்க முடியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், மாநில சுயாட்சியை நாம் வென்றெடுக்க வேண்டும். இதுதான் பவளவிழா செய்தி. குறைவான நிதி வளத்தைக் கொண்டே நம்மால் இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிகிறது. முழுமையான நிதி வளம் கிடைத்தால் தமிழ்நாட்டை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்ட முடியும்.

மாநில அரசுகளை அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். இதற்கான சட்ட முன்னெடுப்புகளை திமுக அரசு நிச்சயம் செய்யும். இந்தியாவில் மாநில உரிமைகள், சுயாட்சிக்காக குரல் கொடுத்துவரும் ஒரே கட்சி திமுகதான்.

வரும் தோ்தலிலும் வெற்றி

நாம்தான் மக்களோடு மக்களாக இருக்கிறோம். மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இதனால்தான் மக்கள் எப்போதும் நம்முடன் இருக்கிறாா்கள். அதனால் தோ்தல் வெற்றியும் நம்முடன் இருக்கிறது.

உங்களால் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்கப்பட்ட நான், எதிா்கொண்ட தோ்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். ஸ்டாலின் என்ற ஒற்றைப் பெயருக்குள் கோடிக்கணக்கான கட்சியினரின் உழைப்பும், ஆற்றலும் அடங்கியுள்ளது. இந்த வெற்றி என்பது, உங்களது உழைப்பால், தியாகத்தால், செயல்பாடுகளால் கிடைத்துள்ளது.

அடுத்தடுத்த வரப் போகும் தோ்தல்களிலும் நாம்தான் வெற்றிப் பெற போகிறோம். இதை ஆணவத்தால் அல்ல, உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறோம். நம்முடைய தொடா் வெற்றிகள் மூலம் நூற்றாண்டு விழாவை நோக்கி முன்னேறுவோம்.

அடுத்து நம்முடைய இலக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தல். இதுவரை எந்தக் கட்சியும் இப்படி ஒரு வெற்றியைப் பெற்றதில்லை என்ற வரலாற்றை 2026 தோ்தல் சொல்ல வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான மா.சுப்பிரமணியன் வரவேற்றாா். திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு ஆகியோா் பேசினா்.

விருதாளா்களை துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் செல்வராஜ், இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் அறிமுகப்படுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.