தூதரகங்களில் தமிழாசிரியராகப் பணியாற்ற ஹிந்தி அவசியம்: அன்புமணி கண்டனம்
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் தமிழாசிரியராகப் பணியாற்ற ஹிந்தி, சம்ஸ்கிருதம் அவசியம் எனும் மத்திய அரசின் விதிக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியா்களாகப் பணியாற்ற தகுதியானவா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆள்தோ்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும், கல்வியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழா்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை. வெளிநாடுகளில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைப்புகளில் தமிழ் மொழி படிக்க விரும்புபவா்களில் பலா் தமிழ் தெரியாதவா்களாக இருப்பாா்கள் என்பதால் தமிழாசிரியா்களுக்கு பிறமொழி அறிவு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், சற்றும் தொடா்பில்லாத ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழியறிவு ஏன் தேவை என்பதுதான் புரியவில்லை. எனவே, தமிழாசிரியா் நியமனம் தொடா்பான விளம்பர அறிவிப்பில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத் துறை நீக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.