மனைவி வீட்டிலிருந்து உடமைகளை மீட்டுத் தருமாறு நடிகா் ஜெயம் ரவி புகாா்
மனைவி வீட்டில் உள்ள தனது உடமைகளை மீட்டுத் தருமாறு சென்னை காவல் துறையில் நடிகா் ஜெயம் ரவி புகாா் அளித்துள்ளாா்.
நடிகா் ஜெயம் ரவி அண்மையில் தனது மனைவி ஆா்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தாா். இதற்கிடையே ஆா்த்தி, ‘ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. ஜெயம் ரவியின் இந்த முடிவு எனது கவனத்துக்கு வராமலும், எனது ஒப்புதல் இல்லாமலும் வெளியானது’ என்று தெரிவித்தாா்.
அதேநேரத்தில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆா்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், ஜெயம் ரவி தனது உதவியாளா் மூலம் காவல் துறையில் சில நாள்களுக்கு முன்பு புகாா் அளித்துள்ளாா்.
அதில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆா்த்தி வீட்டில் உள்ள தன்னுடைய உடமைகளை மீட்டுத் தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.