தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று(செப்.24) அதிகாலை முதலே சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை தமிழகத்தில் 14 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
இந்த நிலையில், கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக உள்ள கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த முகமது அலி அலிம்ஷா என்ற நபர், தடை செய்யப்பட்ட ‘ஹிஜாப் உத் தஹிஹீர்’ என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளது.
இதையடுத்து சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்றடைந்த என்ஐஏ அதிகாரிகள் குழுவினர், நாகர்கோவில், கோட்டாறு இளங்கடை புதுத்தெருவில் உள்ள இமாமின் 2-ஆவது மனைவியின் வீட்டில் இன்று அதிகாலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் இளங்கடை பகுதியில் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த தெருவுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது.