இந்தியா-இலங்கை வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு சூழலுக்கு ஏற்ற மாற்றி அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது :
ஈழத் தமிழர்
இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸ்ஸநாயக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கொண்டவர். இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தவர். இவரால் இலங்கையில் சிங்களவர் - ஈழத் தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண முடியாது.
இலங்கை அரசின் 13-ஆம் சட்டத்திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இந்தியா வலியுறுத்தியும் எந்தப்பயனும் இல்லை. இலங்கை சீனாவுக்கு சாதகமான கொள்கையை கடைப்பிடிப்பது கவலையளிக்கிறது.
ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகாணவும், போர்க்குற்றத்துக்கு காரணமான அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியா-இலங்கை வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.
மதுவிலக்கு கொள்கை
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசைக் காரணம் காட்டக் கூடாது. தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வகுக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தமிழக அமைச்சர் முத்துசாமி கூறுவது போகாத ஊருக்கு வழி கூறுவது போல் உள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.
சென்னை அண்ணாநகரில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் வீடுகளில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழகத்தில் சட்டத்தின்படி தான் ஆட்சி நடபெறுகிறதா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
லோக் ஆயுக்த
தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பை வலுப்படுத்த வேண்டும். முதல்வரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றார் மருத்துவர் ச.ராமதாஸ்.
பேட்டியின் பாமக சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலர் ப.முகுந்தன், தலைமை நிலையச் செயலர் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.