அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 12-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் அலுவலக மின்னஞ்சலுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும், கோட்டூா்புரம் போலீஸாரும் விரைந்து வந்து, சோதனையிட்டனா். ஆனால்அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் வகையில் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த சில மாதங்களுக்குள் 12-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.