தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். மேலும் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார்.
இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தலைநகர் தில்லி வியாழக்கிழமை இரவு சென்றார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை தில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது.
அப்போது, தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது, சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்குவது, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வா் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த சீதாரம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.