பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் எங்கே? சரணடைவார்களா?

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் முன்விடுதலை ரத்து செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் சரணடைவது குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகள்
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகள்
Published on
Updated on
1 min read

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் முன்விடுதலை ரத்து செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் சரணடைவது குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு முன்விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இரண்டு வாரத்துக்குள் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் எங்கே இருக்கிறார்கள், சரணடைவார்களா போன்ற கேள்விகளுக்கு குஜராத் காவல்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தாஹோத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பலராம் மீனா கூறியதாவது:

“அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாகவே குற்றவாளிகளின் சொந்த ஊரான சிங்வாட் வட்டாரம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குற்றவாளிகள் சரணடைவது குறித்து காவல்துறைக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலும் காவல்துறை பெறவில்லை.

இருப்பினும், குற்றவாளிகள் 11 பேரும் காவல்துறை கண்காணிப்பில் உள்ளனர். சிலர் உறவினர்கள் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயது முஸ்லிம் கா்ப்பிணி (5 மாத கா்ப்பிணி) பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். மேலும், பில்கிஸ் பானு கண் முன்பே அவருடைய 3 வயது மகள் உள்பட அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் அரசு முன்விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உள்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகளின் 11 பேரின் முன்விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com