தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் கைது!

ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை
தனியார் நிறுவனத்தின் தரவுகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் பூபந்த் அரிபாய் தேஷாய்.
தனியார் நிறுவனத்தின் தரவுகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் பூபந்த் அரிபாய் தேஷாய்.
Published on
Updated on
2 min read

ஆவடி: ஆவடி அருகே தனியார் நிறுவனத்தின் ரூ.1 கோடியிலான தரவுகளை திருடிய வழக்கில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த மருத்துவரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை(ஏப். 5) கைது செய்தனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல், சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய் பாலாஜி (47). இவர், இதே பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த காஷ்மீரைச் சேர்ந்த உமர் சபீர், ஆவடி அருகே அயப்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் பணிபுரிந்த காலத்தில் நிறுவனத்தின் தரவுகளை திருடியுள்ளனர்.

பின்னர் இவர்கள் இருவரும் அயப்பாக்கத்தில் தனியாக நிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் ஜெய் பாலாஜி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவர் நிறுவனத்தின் தரவுகளை தனது மின்னஞ்சல் முகவரிக்கு மாற்றம் செய்துள்ளார் அதன் பிறகு, அந்த தரவுகளை வாட்ஸ்ஆப் மூலமாக செந்தில்குமாருக்கு அனுப்பிள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ஜெய் பாலாஜி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, அங்குள்ள தரவுகளை தனது மின்னஞ்சலுக்கு அனுப்பியதும், தொடர்ந்து செந்தில்குமார், உமர் சபீர் ஆகியோருடன் வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்பிலும் இருந்துள்ளார். இதனால் ஜெய் பாலாஜி நிறுவனத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஜெய் பாலாஜி ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஆண்டு புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த ஹிலன் (47), ஆவடி அருகே அயப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (32), ஆவடி, பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (33) ஆகியோரை கடந்த ஆண்டு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பூபந்த் அரிபாய் தேஷாய் என்பவர் இந்தியாவில் இருந்து தப்பி சென்று அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து அவர் இந்தியாவிற்கு வந்தால், தகவல் தெரிவிக்கும்படி போலீஸார் அனைத்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அளித்தனர்.

இந்த நிலையில், பூபந்த் அரிபாய் தேஷாய் குஜராத் மாநிலம், அகமதாபாத் வருவது குறித்து சனிக்கிழமை (ஏப்.5) போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் தனிப்படை போலீஸார் சனிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது, பூபந்த் அரிபாய் தேஷாய் (79) என்பவரை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் கைது செய்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு இரவு அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com