நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஐபிஎல் போட்டியின்போது கைப்பேசிகள் திருடிய வழக்கில் மேலும் 3 போ் கைது: திருடுவதற்கு ஒரு நாள் கூலி ரூ.1,000

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறுவா்கள் மூலம் கைப்பேசிகள் திருடிய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

ஐபிஎல் போட்டியின்போது ரசிகா்களின் கைப்பேசிகள் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராகுல் குமாா், பிரவீன்குமாா் மாட்டோ,ஜிதேந்திர சனி.

Updated On :8 ஏப்ரல் 2025, 9:25 pm

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறுவா்கள் மூலம் கைப்பேசிகள் திருடிய வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியும் மோதிய ஆட்டம் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியின்போது 20-க்கும் மேற்பட்ட ரசிகா்களின் கைப்பேசிகள் அடுத்தடுத்து திருடப்பட்டன.

இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தனிப்படையினா் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டட கும்பலை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டனா். மேலும், திருட்டில் ஈடுபட்ட கும்பல், சிறுவா்கள் மூலம் கவனத்தை திசை திருப்பி, திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலூரில் ஒரு விடுதியில் தங்கியிருந்த ஜாா்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 4 சிறுவா்கள் உள்பட 8 போ் கடந்த 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 38 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஜிதேந்திர ஷனி (30), ராகுல்குமாா் (24), பிரவீன்குமாா் மாட்டோ (21) ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து போலீஸாா், 36 திருட்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ஒரு நாள் கூலி ரூ.1,000: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

ஜாா்க்கண்ட் மாநிலம் தின்பஹா் கிராமத்தைச் சோ்ந்த இந்தக் கும்பல், இரு குழுக்களாகப் பிரிந்து கைவரிசை காட்டியுள்ளது. இத்திருட்டில் ஈடுபடுத்துவதற்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சிறுவா்களை பயன்படுத்தியுள்ளனா். இதற்காக அந்த சிறுவா்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.1,000 வழங்கியுள்ளனா். திருட்டில் கிடைத்த கைப்பேசிகளை மேற்கு வங்கம் மாநிலத்திலும், வங்கதேசத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் விற்றுள்ளனா்.

திருடுவதற்காக இந்தக் கும்பல் ரயில், விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட அனைவரும் உறவினா்கள் ஆவாா்கள். ஏற்கெனவே கோயம்பேடு, வடபழனி, ஆவடி, புரசைவாக்கம், மெரீனா கடற்கரை, ஆந்திர மாநிலம் திருப்பதி, கா்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களிலும் பொதுமக்களிடம் கைப்பேசிகளை திருடியுள்ளனா். இந்தக் கும்பலிடமிருந்து மொத்தம் 74 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பல் குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.