அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிப்பதாக புகாா்: விசாரணைக்கு அமைச்சா் உத்தரவு
அரசு நிகழ்ச்சிகளுக்கு மருத்துவா்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழாவுக்கு காத்திருக்காமல், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி, கன்னியாகுமரியில், ரூ.7.35 கோடியில் 15 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், தென்காசியில், ரூ.9.02 கோடியில் 16 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருந்தன.
தென்காசியில் பங்குனி உத்திரம் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. அதில் பங்கேற்கும் வகையில், அந்த மாவட்டத்தில் நடைபெற இருந்த, கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி வேறு ஒரு நாள் அறிவிக்கப்பட்டு நடைபெறும்.
தென்காசியில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பற்றிய உண்மைத்தன்மை அறிய, பொது சுகாதாரத் துறையின் இணை இயக்குநா் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தவறு செய்தவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.