
கோவை: பூப்பெய்திய 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி வகுப்பறைக்குள் தேர்வெழுத அனுமதி மறுத்த அவலம் கோவை தனியார் பள்ளியில் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து, செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் தற்போது முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வரும் சூழலில் அந்தப் பள்ளியிலும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுருதிகா ஸ்ரீ என்ற மாணவி, கடந்த ஏப். 5 ஆம் தேதி அன்று பூப்பெய்தியுள்ளார். இந்நிலையில் ஆண்டுத் தேர்வு என்பதால் அவர் தேர்வெழுத பள்ளிக்குச் சென்றுள்ளார்.
ஆனால், பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறைக்கு வெளியே வாசலில் அமர்ந்து தேர்வெழுதச் சொல்லியிருக்கின்றனர்.
கடந்த திங்கள்கிழமை ஒரு தேர்வு எழுதிய மாணவி, நேற்று(புதன்கிழமை) அறிவியல் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு தேர்வுகளுமே வகுப்பறைக்குள் செல்லவிடாமல் வாசற்படியில் அமர்ந்து தேர்வெழுதச் சொல்லியுள்ள அவலம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மாணவியைப் பார்ப்பதற்காக அங்கு வந்த அவரது தாய் மற்றும் உறவினர் சென்று மாணவியிடம் கேள்வி எழுப்பி, அதனை விடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விடியோவில், மாணவியிடம் 'இங்கு அமர்ந்து ஏன் தேர்வு எழுதுகிறாய்? வகுப்பறைக்குச் சென்று எழுதவில்லையா?' என்று கேள்வி கேட்க, மாணவி, 'பள்ளியின் முதல்வர்தான் இங்கு அமர்ந்து தேர்வெழுதச் சொன்னார்' என்று கூறியுள்ளார். மேலும் தன்னை வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாய், அங்கிருந்த ஆசிரியர்களிடம் கேட்கும்போது, "இங்கு அப்படித்தான் நடக்கும், நீங்கள் வேண்டுமெனில், வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விடியோவை பார்த்து பலரும் கண்டனம் தெரிவிப்பதுடன், பள்ளி நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது கல்வித் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்' என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளியிலே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.