பீதியின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்: இபிஎஸ்

அதிமுக - பாஜக கூட்டணியால் திமுக பீதியில் இருப்பதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு
பீதியின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்: இபிஎஸ்
Published on
Updated on
1 min read

அதிமுக - பாஜக கூட்டணியை தோல்வி கூட்டணி என்று கூறி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியால் திமுக பீதியில் இருப்பதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான மு.க. ஸ்டாலின், தினமும் என்ன பிரச்னை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார். நேற்று முன்தினம், அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அதிமுகவின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது.

இந்த நிலையில்தான், பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நான் தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான குறைந்தபட்ச செயல்திட்டம் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்தார். இதுகுறித்து, `என்னவாக இருக்கும்? என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த முதல்வர் ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து, அதனை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலப் பிரச்னைகள் மீது இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா?

நீட் தேர்வை இந்திய நாட்டுக்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம்வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?

அதிமுக, ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது. மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும். காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த திமுகவின் தலைவர் அதனைப் பற்றி கவலைப் பட வேண்டாம். திமுகவின் ஊழல் ஆட்சியைத் தோலுரித்து, மக்களின் பேராதரவோடு, 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

மேலும், ரெய்டுகளுக்கு பயந்து, விடியோகூட வெளியிட முடியாத அளவுக்கு பயந்து கொண்டிருப்பது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியைத்தான், தமிழ்நாட்டு மக்கள் அந்த அணிக்குக் கொடுத்தார்கள். பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை - தமிழ்நாட்டின் உரிமைகளை தில்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி.

இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அ.தி.மு.க.வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com