
ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2020 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஏப். 8 ஆம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்றும் அந்த மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட ஆளுநருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் நகலை தமிழ்நாடு அரசு அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் 2023 நவ.18 அன்றே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாவது திருத்தச்) சட்ட முன்வடிவு சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண் 48/2022) 19 அக்டோபர் 2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதாலும் மற்றும் கூறப்பட்ட சட்டமுன்வடிவிற்கு 13 நவம்பர் 2023 அன்று ஆளுநர் இசையளிக்க மறுத்தார் என்பதாலும் மற்றும் முதலமைச்சரால் 8.11.2003 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் கூறப்பட்ட சட்டமுன்வடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு எந்தவித மாறுதலுமின்றி சட்டமன்றப் பேரவையில் மீண்டும் இயற்றப்பட்டது என்பதாலும்,
மற்றும் கூறப்பட்ட சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 48/2022 18.11.2023 அன்று ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு அவர் அந்தச் சட்டமுன்வடிவை 28.11.2003 அன்று குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியிருந்தார் என்பதாலும்
மற்றும் குடியரசுத்தலைவர் கூறப்பட்ட சட்டமுன்வடிவிற்கு 18.02.2004 அன்று ஒப்புதல் வழங்கி அது 07.03.2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி IV -பிரிவு 3இல் தமிழ்நாடு சட்டம் 10/2024 என சட்டமாக வெளியிடப்பட்டு மேற்கூறிய தேதியன்று அதாவது 07.03.2024 அன்று நடைமுறைக்கு வந்து விட்டது என்பதாலும்
மற்றும் உச்சநீதிமன்றம் நீதிப்பேரானை மனு எண்.1239/2023 08.04.2025 தேதியிட்ட அதன் ஆணையில், மேற்கூறிய சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்பிய பின்னர் குடியரசுத் தலைவர் எடுத்திருக்கக்கூடிய அனைத்து விளைவுறு நடவடிக்கைகளும் சட்டத்தின்படி இல்லா நிலையது என்றும் மேற்கூறிய சட்ட முன்வடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட நாளில் அவரால் ஒப்புதல் அளிப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது என்பதாலும்'
தற்போது 08.04.2025 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் மேற்கூறிய ஆணையின் அடிப்படையில் கூறப்பட்ட சட்டமன்றப் போவை சட்டமுன்வடிவு எண் 48/2022 ஆனது தமிழ்நாடு ஆளுநரால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.