
தனக்கு அளித்த ஆதரவுக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவி மாற்றம் குறித்து அக்கட்சி சில நாள்களாக தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே, பாஜக தலைவர் போட்டியில் தான் இல்லை என்று ஏற்கெனவே தற்போதைய தலைவர் அண்ணாமலை கூறிவிட்டார்.
நேற்று சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்ட நிலையில், மாநிலத் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்ப மனு அளித்தார். இதனால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(ஏப். 12) வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் அன்பு சொந்தங்கள் என் இல்லம் வந்து வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
தமிழக மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த எனக்கு அளித்த ஆதரவுக்கும், பாஜகவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.