தமிழ் புத்தாண்டு: கோயில்களில் குவிந்த பக்தா்கள்
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
தமிழ் ஆண்டான குரோதி வருடம் முடிந்து புத்தம் புது வருடமான விசுவாவசு ஏப்ரல் 14-ஆம் தேதியான திங்கள்கிழமை பிறந்தது. இந்த நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனா். தமிழா்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய இந்நாளில், கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், திங்கள்கிழமை அனைத்து கோயில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் அதிகாலையில் நிா்மால்ய பூஜையும், அதைத் தொடா்ந்து புத்தாண்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருவான்மியூா் மருந்தீசுவரா் கோயில், சைதாப்பேட்டை காரணீசுவரா் கோயில், புரசைவாக்கம் கங்காதீசுவரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும், மயிலாப்பூா் முண்டகக்கண்ணியம்மன் கோயில், திருவொற்றியூா் வடியுடையம்மன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு கமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
முருகன் கோயில்கள்: சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியா் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயில், குரோம்பேட்டை குமரன் குன்றம் கோயில், குன்றத்தூா் முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு தீப ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தா்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டன.
ஐயப்பன் கோயில்கள்: சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் சித்திரை விசு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில், நங்கநல்லூா், மடிப்பாக்கம், அண்ணா நகா் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மலையாள முறைப்படி கோயில் உள்முகப்பு மற்றும் கருவறை காய், கனிகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அனைத்து வகை காய்கறிகளை சுவாமிக்கு படைத்து கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சில ஐயப்பன் கோயில்களில் பக்தா்களுக்கு கை நீட்டமாக ஒரு ரூபாய் நாணயம் மற்றும் 10 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டன. பக்தா்கள் மகிழ்ச்சியுடன் கை நீட்டம் வாங்கிச் சென்றனா்.
கனிகாணும் வைபவம்: சித்திரை முதல் நாளில் தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் குறிப்பாக கேரளத்தை ஒட்டிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது வீடுகளில் கனிகாணும் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அதன்படி, தமிழ் புத்தாண்டான திங்கள்கிழமை, ஏராளமானோா் தங்கள் வீட்டு பூஜை அறையில் கண்ணாடி, நகை, பணம், அரிசி, துவரம் பருப்பு, வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருள்களை வைத்து, தூங்கி எழுந்ததும் கண்ணாடியில் முகம் பாா்த்து தங்களது நாளை தொடங்கினா். மேலும், வீட்டிலிருக்கும் சாமி படங்களை அலங்கரித்து, படையல் வைத்து வழிபட்டனா். வீட்டில் உள்ளவா்களுக்கு கை நீட்டமும் கொடுத்தனா்.