சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து தொடர்பாக...
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப் பதியப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், அவரது சகோதரர் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து வேலூர் முதன்மை அமா்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடைபெற்றது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ. ரவீந்திரன், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை விளக்கி வாதிட்டாா்.

அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தார்த் லுத்ரா, பி.வில்சன் ஆகியோர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவா்களின் சொத்துக்களையும், அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சோ்த்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியிருப்பது தவறானது. இந்த வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனின் குடும்பத்தினரை, அவருடைய பினாமி என குறிப்பிட எந்த ஆதாரமும் இல்லை என்றனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக, வருமான வரிக் கணக்குகளை தனித்தனியாக முறையாக தாக்கல் செய்துள்ளனர். அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது. எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டிய இந்த வழக்கை, அதிகார வரம்பு இல்லாத ஆய்வாளர் ஒருவா் புலன் விசாரணை செய்துள்ளார். அமைச்சருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய சட்டப்படி எந்த அனுமதியும் பெறவில்லை.

இதை எல்லாம் கருத்தில் கொண்டே விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவித்துள்ளது. எனவே அந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், எனவும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் இன்று(ஏப். 23) தீர்ப்பளித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்று துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பெஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சொன்னது என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com