திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

ஒரே நாளில் திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் இபிஎஸ் கேள்வி
திருப்பூர் எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை
திருப்பூர் எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை
Published on
Updated on
1 min read

திருப்பூர் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ் ஐ அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன. காவல் நிலையத்தில்கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்?

விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?

முதல்வர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும், இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான திசைதிருப்பும் உத்தி மட்டுமே.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம். மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே. மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் இருவரும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தை மூர்த்தியைக் கடுமையாக தாக்கியதாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்எஸ்ஐ சண்முகவேல், காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதனிடையே, சண்முகவேலையும் தங்கப்பாண்டியன் அரிவாளால் வெட்டியதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய தங்கபாண்டியனை தேடுவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை

கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு புகாரளிக்க வந்த அறிவொளி ராஜன், உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மனநலம் பாதித்தவர் என்று கூறப்படும் அறிவொளி ராஜன், காவலர்கள் யாரும் பார்க்காத நேரத்தில் உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்ப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com