தமிழக அரசின் தாயுமானவர் திட்டம் விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, கேப்டன் அறக்கட்டளை மூலம் கட்சி தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தாயுமானவர் திட்டம் கேப்டனுக்கு கிடைத்த வெற்றி. இந்தத் திட்டத்தை விஜயகாந்த் தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருந்தார். அப்போது இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என கேலி பேசியவர்கள், தற்போது அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். கேப்டனின் கனவு திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் தேமுதிக சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறுகின்றன. தேர்தலில் முறைகேடுகள் நடப்பது உண்மை. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்பதுபோல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு உள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் வந்தால் தேமுதிக அதனை வரவேற்கும்.
அரசியல்ரீதியாக பெண் ஆளுமை எனும் விருது எனக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே அரசியலில் பெண் ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. தற்போது பெண் ஆளுமையாக நான் இருப்பதால் இருவரையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டன. அதைத்தான் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.
அரசியலில் ஆளுமைமிக்க பெண் அரசியல்வாதி ஜெயலலிதாதான். கட்சியையும் ஆட்சியையும் கட்டுக்கோப்போடு ஆட்சி செய்த ஜெயலலிதாதான் என்னுடைய ரோல் மாடல்.
கேப்டன் விஜயகாந்த் மானசீக குருவாக நினைத்தவர் எம்ஜிஆர்தான். அதனால்தான் எம்ஜிஆர் பிரசார வாகனம் விஜயகாந்திடம் வழங்கப்பட்டது. எம்ஜிஆர் காது கேளாத பள்ளிக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து விஜயகாந்த் உதவி செய்து வந்துள்ளார். அதனால்தான் தேமுதிக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலை உள்ளது.
எம்ஜிஆரை தனது மானசீக குரு என கேப்டன் தெரிவித்ததுபோல கேப்டனை, 'என்னுடைய அரசியல் குரு, மானசீக குரு' என விஜய் அறிவிக்கட்டும், அதன்பிறகு அவருடைய படத்தைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கலாம்.
ஆட்சியில் பங்கு என்பதை தேமுதிக வரவேற்கிறது. கூட்டணியில் பங்கு பெறுபவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கும்போது யார் தவறு செய்தாலும் கேட்க முடியும். எனவே, கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது.
கேப்டன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது ஸ்டாலின் தொடர்ந்து கேப்டனை சந்தித்து நலன் விசாரித்து வந்தார். அதே போல், பதவி ஏற்கும் போதும், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் கேப்டனை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். மரியாதை நிமித்தமாகவே, உடல் நலன் குறித்து விசாரிக்கவே ஸ்டாலினைச் சந்தித்தோம். எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். அதனால் எங்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நல்ல நட்பு உண்டு. ஆகையால் அரசியல் வேறு; குடும்ப நட்பு வேறு.
கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் கேப்டன் படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் இடம் பெறாத கட்சியினர் கேப்டன் படத்தை பயன்படுத்தக் கூடாது.
234 தொகுதியிலும் தேமுதிகவை வளர்ப்பதே எங்கள் நோக்கம். தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.
பேட்டியின்போது அவை தலைவர் இளங்கோவன். பொருளாளர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன் ராஜ், பணிக்குழு செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.