
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் இருக்கும் நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள். தொழில்முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும்.
ஜவுளி ஆடை, தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், மின்னணுப் பொருள்கள், கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்நிலையில், இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள், தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில், வங்கதேசம் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா இந்த அளவிற்கு வரியை விதிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாகவும், அதே நேரத்தில் 50 சதவீதம் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும்.
எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | டீ, காபி விலை நாளை முதல் உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.