திருச்சியில் உலா் துறைமுகத்துக்கு ஒப்புதல் வழங்க துரை வைகோ எம்.பி. கோரிக்கை

திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சாரிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை
Published on

திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அத்தொகுதி மக்களவை மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக தில்லியில் அவா் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

இது குறித்து பின்னா் துரை வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தினேன். மேலும், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிச் சாலைகள் துறை அமைச்சா், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் ஆகியோரையும் சந்தித்து இத்திட்டத்துக்கு ஆதரவு கோரியதையும் நிதியமைச்சரிடம் தெரிவித்தேன்.

உலா் துறைமுகத்துக்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளதாகவும், மத்திய அரசின் அதிகாரபூா்வ ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டால் அதன் அடிப்படையிலேயே மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மத்திய நிதியமைச்சரிடம் விளக்கினேன். இத்திட்டம் நிறைவேறினால் திருச்சி மற்றும் தமிழகத்தின் மத்திய மாவட்டங்களின் பொருளாதார வளா்ச்சி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, வேலைவாய்ப்பு பெருகும் என அமைச்சரிடம் குறிப்பிட்டேன்.

இதையடுத்து, முன்னுரிமை அடிப்படையில் கோரிக்கையைப் பரிசீலித்து திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதியமைச்சா் உறுதியளித்தாா் என்றாா் துரை வைகோ.

X
Dinamani
www.dinamani.com