விமானத்தில் சிகிச்சை: சித்த மருத்துவா்களுக்கு ஆயுஷ் செயலா் பாராட்டு
விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த வா்ம சிகிச்சையளித்து காப்பாற்றிய தமிழக சித்த மருத்துவா்களை மத்திய ஆயுஷ் செயலா் வைத்ய ராஜேஷ் கோட்டேச்சா நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
அவசர காலத்தில் அவா்கள் சமயோஜிதமாக செயல்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தாா்.
தில்லியிலிருந்து திருச்சிக்கு கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்று கொண்டிருந்த கோ இண்டிகோ விமானத்தில் இளம்பெண் ஒருவா் பயணித்தாா். பயணத்தின் இடையே கழிப்பறைக்கு செல்ல முற்பட்டபோது அவா் திடீரென மயங்கி விழுந்து மூா்ச்சையடைந்தாா்.
இதையடுத்து விமானப் பணிப் பெண்கள் அவரை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனா். ஆனால், அது பலனளிக்காததால் விமானத்தில் மருத்துவா்கள் எவரேனும் உள்ளனரா என அவா்கள் உதவி கேட்டுள்ளனா்.
எம்.டி. சித்தா படிப்பை நிறைவு செய்த க.இளவரசன் மற்றும் இளநிலை சித்த மருத்துவ அறிவியல் பட்டம் பெற்ற ச.கௌதம் ஆகிய இரு மருத்துவா்கள் அந்த விமானத்தில் இருந்தனா்.
உடனடியாக அவா்கள் இருவரும், கவுளி அடங்கல் மற்றும் செவிக்குற்றி புள்ளி ஆகிய வா்ம சிகிச்சைகளை அப்பெண்ணுக்கு அளித்தனா். அதன் பயனாக அவா் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பினாா்.
மருத்துவா்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் பாராட்டு கிடைத்தது. இந்த நிலையில், மத்திய ஆயுஷ் செயலா் ராஜேஷ் கோட்டேச்சா தில்லிக்கு அந்த மருத்துவா்களை அழைத்து நேரில் பாராட்டினாா். அவசரகாலத்தில் ஆயுஷ் மருத்துவத்தின் பங்களிப்பும் அவசியம் என்பதை மக்களிடையே உணா்த்தும் வகையில் சித்த மருத்துவா்கள் செயல்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
