புதுச்சேரியில் விஜய் சாலைவலம் செல்ல அனுமதி மறுப்பு!

புதுச்சேரியில் விஜய் சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது பற்றி..
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் விஜய் சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய், கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சாலை வலம் செல்ல விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசும் விதிமுறைகளை வகுத்து நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்காததால் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் புதுவையில் வரும் 5-ம் தேதி விஜய் சாலைவலம் செல்ல தவெக சார்பில் போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டது. அதையடுத்து கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் வந்தார். அப்போது உயர் அதிகாரிகள் இல்லாததால் திங்கள்கிழமை வருமாறு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விட்டு கோரிக்கை வைத்து புறப்பட்டார்.

பின்னர் திங்கள்கிழமை காலை மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு புஸ்ஸி ஆனந்த் வந்தபோது உயர் அதிகாரிகள் இல்லாததை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை இரவு முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து விட்டு புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டார்.

இதைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் தந்த கடித்ததை எஸ்எஸ்பி கலைவாணனுக்கு முதல்வர் ரங்கசாமி அனுப்பினார்.

இதையடுத்து இன்றுகாலை 11 மணிக்கு எஸ்எஸ்பி அலுவலகத்தில் எஸ்எஸ்பி கலைவாணன் காத்திருந்தார். ஆனால் யாரும் வராததால் அவர் புறப்பட்டார். அவரிடம் கேட்டதற்கு, அலுவல் பணிக்காக காவல்துறை தலைமையகத்துக்கு புறப்படுகிறேன் என்றார். இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று பிற்பகல் 11.35 மணியளவில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள எஸ்எஸ்பி அலுவலகத்துக்கு தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோர் வந்தனர்.

ஆனால் எஸ்எஸ்பி கலைவாணன், போலீஸ் தலைமையகத்துக்கு சென்றுவிட்ட தகவலை அங்கிருந்த போலீஸார் தெரிவித்தனர்.

இதனால் அவர்கள் யாரையும் சந்திக்காமல் மீண்டும் காரில் ஏறி திரும்பி சென்றனர். தொடர்ந்து அவர்கள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் வீட்டுக்குச் சென்றனர். நீண்ட நேரம் காத்திருந்து. பின்னர் பிற்பகலில் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வந்தவுடன் அவரை சந்தித்தனர். அவருக்கு காமராஜர் புத்தகம் பரிசளித்து சாலைவலத்துக்கு அனுமதி கோரினர். அடுத்து சட்டப்பேரவைக்கு வருகிறேன் அங்கு வந்து விடுங்கள் என்றார்.

அதையடுத்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். அங்கு காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினர்.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐஜி அஜித்குமார் சிங்கிளா, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தவெக தரப்பில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதால் சாலைவலம் செல்ல அனுமதி இல்லை என கூட்டத்தில் காவல்துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் வெளியே சென்றனர்.

கூட்டத்துக்கு பின்னர் டிஐஜி சத்தியசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி விஜய் சாலைவலம் செல்ல அனுமதி இல்லை. திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடத்தையும், தேதியையும் அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

Summary

Regarding the denial of permission to enter Vijay Roadshow in Puducherry..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com