

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
வட தமிழகத்தை அச்சுறுத்தி வந்த டிட்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டதால், கடந்த இரண்டு நாள்களாக சாரலுடன் பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவுக்குப் பின்னர் நகர் முழுவதும் பரவலாக மிதமான மழைத் தொடங்கியது.
திங்கள்கிழமை காலை சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது.
இதனால், காலையிலேயே வேலைக்குச் செல்லும் பலரும் பேருந்துகளுக்குப் பதிலாக மெட்ரோ ரயில்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதானது. இதில், 20 மேற்பட்டோர் உள்ளே இருந்தனர்.
மெட்ரோ ரயிலில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சுரங்கத்துக்குள் மெட்ரோ ரயில் சிக்கியதால் பலரும் அவதிக்குள்ளாகினர்.
அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்திற்கும் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. மேலும், கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 6.20 மணிக்கு வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கின” எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.