ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிணை வழங்கப்பட்ட 12 போ் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி தனக்கு பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வழக்கில் 12 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், 12 பேரின் பிணையை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்குகள் நீதிபதி கே.ராஜசேகா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டாா். மேலும், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை டிச. 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

