பழனி உள்ளிட்ட 48 கோயில்களின் முழுமையான தணிக்கை விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

பழனி உள்ளிட்ட 48 கோயில்களின் முழுமையான தணிக்கை விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் அதிக வருவாய் உள்ள பழனி உள்ளிட்ட 48 கோயில்களின் முழுமையான தணிக்கை விவரங்களை பிடிஎஃப் வடிவில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்
Published on

தமிழகத்தில் அதிக வருவாய் உள்ள பழனி உள்ளிட்ட 48 கோயில்களின் முழுமையான தணிக்கை விவரங்களை பிடிஎஃப் வடிவில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூ.1,000-க்கு மேல் வருமானம் இருந்தால், அந்தக் கோயிலின் வரவு -செலவு கணக்கை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் ஆண்டுதோறும் வெளிட வேண்டும் என்பது இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதி. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் கோயில்களின் வரவு- செலவு கணக்கு வெளியிடப்படவில்லை.

பக்தா்கள், கொடையாளா்கள் அக்கோயிலின் வரவு -செலவுகளைத் தெரிந்துகொள்ள உரிமை உள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள், காா்ப்பரேட் நிறுவனங்கள் வரவு -செலவு கணக்குகளை தங்களது இணையதளத்தில் வெளியிடுவதுபோல, கோயில்களின் வரவு -செலவு கணக்குகளை அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழ்நாட்டில் உள்ள பழனி உள்ளிட்ட பெரிய கோயில்களின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் வருமானம் வரும் 179 கோயில்களில் 173 கோயில்களின் வரவு-செலவு கணக்கு தணிக்கை முடிந்துவிட்டது.

ரூ.1 கோடி வரை வருமானம் வரும் 109 கோயில்களில், 98 கோயில்களின் வரவு-செலவும், ரூ.50 லட்சம் வரை வருமானம் வரும் 650 கோயில்களில் 444 கோயில்களின் வரவு-செலவும், ரூ.10 லட்சம் வரை வருமானம் வரும் ரூ.2,345 கோயில்களில் 829 கோயில்களின் வரவு-செலவும், ரூ.1 லட்சம் வருமானம் வரக்கூடிய 3,155 கோயில்களில், 359 கோயில்களின் வரவு-செலவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வருமானம் வரும் 2,456 கோயில்களில், 63 கோயில்களின் வரவு-செலவும், ஒரு கால பூஜை நடைபெறும் 16,748 கோயில்களில், 8,200 கோயில்களின் வரவு-செலவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மற்ற கோயில்களில் இந்த பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அதிகமான வருவாய் வரும் பழனி உள்ளிட்ட 48 கோயில்களின் வரவு -செலவு தணிக்கை செய்யப்பட்டுள்ளன. வருவாய் குறைவான கோயில்களின் வரவு-செலவு தணிக்கை செய்யப்படாமல் உள்ளன. இந்த விவரங்கள் அறநிலையத் துறை அல்லது கோயில் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

வருமான தணிக்கையின் சுருக்க வடிவம் மட்டுமே வெளியிடப்படும்; முழு விவரங்களை வெளியிட முடியாது என அறநிலையத் துறை கூறுவதை ஏற்க முடியாது. முழு விவரங்களை வெளியிடக்கூடாது என எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள 48 பெரிய கோயில்களின் முழுமையான தணிக்கை விவரங்களை பிடிஎஃப் வடிவில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com