சென்னை விமான நிலையத்தில் 7-ஆவது நாளாக 71 விமான சேவை ரத்து
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் 71 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்த தேவையான ஏற்பாடுகளைப் பிற விமான நிறுவனங்கள் செய்தது. ஆனால், இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதால், பல பணியாளா்கள் பணி புறக்கணிப்பு செய்துள்ளனா்.
இதுதவிர, ஏற்கெனவே பயணியாளா் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதால் கடந்த 6 நாள்களாக இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. இதனிடையே பணிக் குழு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை சற்று சீரடையத் தொடங்கியுள்ளது.
இருப்பினும் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 38 புறப்பாடு விமானங்கள், 33 வருகை விமானங்கள் என மொத்தம் 71 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
இதனிடையே ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் அல்லது மிகவும் தாமதமாக விமானங்களை இயக்கியதற்காகப் பயணிகளுக்கு இதுவரை ரூ.610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளது. மேலும், பாா்சல் பிரிவுகளில் தேங்கிக் கிடக்கும் சுமாா் 4,500-க்கும் மேற்பட்ட பயணிகளின் உடைமைகளையும் அடுத்த ஒருசில தினங்களில் உரியவா்களிடம் ஒப்படைக்கவும் விமான போக்குவரத்து ஆணையம் இண்டிகோ நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளையும் இண்டிகோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதேசமயம், விமான சேவைகள் டிச. 10-ஆம் தேதிக்குள் சீராக்கப்படும் என்று நம்புவதாக இண்டிகோ நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

