

ஈரோட்டில் விஜய் நாளை பிரசாரம்: பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தவெக தலைவர் விஜய் நாளை(டிச. 18) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு 4 மாவட்ட காவல் துறையினர் வருகைத் தந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மக்கள் சந்திப்பு என்ற பெயரில் நாளை (டிச. 18) நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பேசுகிறார்.
தவெக தலைவர் விஜய், வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரசார வாகனத்தில் இருந்தபடி பேச உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக காவல் துறை சார்பில் மொத்தம் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக பிரசார வாகனம், விஐபி பெட்டிகள், பெண்கள் பெட்டிகள், பிற பெட்டிகள், உள்நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் ஆகியவற்றை தெளிவாகக் காட்டும் வரைபடத்தை காவல் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற முறையில் முன்கூட்டியே கூடுவதை தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின்கம்பங்கள், மரங்கள், கட்டடங்கள், விளம்பரப் பதாகைகளில் ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
விஜய் செல்லும் வழியில் சாலை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரசாரக் கூட்டத்துக்கு வர பாஸ் முறை கிடையாது என்பதால் பொதுமக்கள் வரலாம். எந்த நேரத்தில் தொண்டர்கள், பொதுமக்களை அனுமதிப்பது என்பதை அன்றைய நாள் காவல் துறை முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்யவுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் இன்று நேரில் ஆய்வு கொண்டார்.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 4 மாவட்ட காவல் துறையினர் குவிந்துள்ளனர்.
இதையும் படிக்க: விஜய் செய்தியாளர் சந்திப்பை நடத்தாதது ஏன்? தவெக விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.