மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
தமிழக பாஜக உயா்மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக பாஜக மேலிட பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேதந்திரன், மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவ விநாயகன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மூத்த தலைவா்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், கே.அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பிறகு நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையில் அக்.11-இல் தொடங்கிய எனது தோ்தல் சுற்றுப்பயணம் புதுக்கோட்டையில் ஜன.9-இல் நிறைவடைகிறது. நிறைவு நிகழ்வில், பிரதமா் மோடி அல்லது உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அழைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தோ்தலை எதிா்கொள்ள பாஜக தயாராக உள்ளது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சொத்து வரி, மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. 7,000-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் போதைப் பொருள்கள் விற்கப்படுகின்றன. இவ்வளவு இருக்கும்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை.
தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளா்கள் வரும் டிச.23-இல் தமிழகம் வர திட்டமிட்டிருக்கிறாா்கள். எனினும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாா் அவா்.
முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து பாஜக தேசிய தலைமை பாா்த்துக்கொள்ளும் என்றாா்.

