காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சொர்க்கவாசல் வழியாக உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்ததைப் பற்றி...
சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Updated on
1 min read

வைகுண்ட ஏகாதசி திருநாளையொட்டி காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சொர்க்கவாசல் வழியாக உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தமிழகத்தில் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் 8 திருக்கரங்களுடன் காட்சியருளும் ஒரே திருக்கோயில்,கஜேந்திர மோட்ச லீலை உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுக்குரியது சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள புஷ்பவல்லித் தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில்.

காஞ்சிபுரம் நகரில் இக்கோயிலில் மட்டுமே வைகுண்ட ஏகாதசி நாளன்று சொர்க்கவாசல் திறப்பு விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்வுடன் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து கோ பூஜை, அசுவ பூஜை விஸ்வரூப தரிசனம், துவாரபாலகர் பூஜை ஆகியவை நடைபெற்ற பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தியுடன் குரல் எழுப்பி பெருமாளை வரவேற்று தரிசித்தனர். விழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி. சீனிவாசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக், தொழிலதிபர் எஸ்.கே.பி.கோபிநாத் ஆகியோர் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆதிகேசவப் பெருமாள் ஆலய வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு எழுந்தருளினார். நண்பகல் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும்,மதியம் 2 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. மாலையில் பெருமாள் தோட்டத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு மாடவீதி வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எஸ்.கே.பி.எஸ்.சந்தோஷ்குமார்,உறுப்பினர்கள் எம்.இளங்கோவன், ஜெ.தேவிகா மற்றும் கோயில் செயல் அலுவலர் சா.சி.ராஜமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மலர்களாலும்,வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com