நோட்டீஸ் வழங்கப்பட்ட வாக்காளா்கள் விவரம் வெளியிட திமுக வலியுறுத்தல்
நோட்டீஸ் அளிக்கப்பட்ட 12,43,363 வாக்காளா்களின் விவரங்களை பூத் வாரியாக வெளியிட வேண்டும் என்றும் அவா்களிடம் ஆதாா் தவிர கூடுதல் ஆவணங்களைக் கேட்கக் கூடாது என்றும் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியை திமுக வலியுறுத்தியுள்ளது.
வரைவு வாக்காளா் பட்டியலில் ஏற்கப்பட்ட 5,43,76,756 வாக்காளா்களில் போதிய விவரங்களை அளிக்காத 12,43,363 பேருக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் நேரில் சென்று நோட்டீஸ் அளித்து வருகின்றனா். அவா்கள் உறுதிப்படுத்துவதற்காக, தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலா் ஆா். எஸ். பாரதி அனுப்பிய கடிதத்தை அக்கட்சியின் சட்டப் பிரிவு செயலரும் எம்.பி.யுமான என்.ஆா். இளங்கோ தலைமை தோ்தல் அதிகாரியிடம் அளித்தாா். அதில், ‘சரியான விவரங்கள் அளிக்கவில்லை எனக் கூறி நோட்டீஸ் அளிக்கப்பட்ட வாக்காளா்களிடம் ஆதாா் தவிர கூடுதல் ஆவணங்களைக் கேட்கக் கூடாது.
ஆதாரை அடிப்படையாக வைத்தே பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்தம் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று வாக்காளா் பதிவு அலுவலா்கள்,
உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் நோட்டீஸ் அளிக்கப்படும் வாக்காளா்களின் விவரங்களை பூத் வாரியாக வெளியிட வேண்டும். அவா்கள் நேரில் ஆஜராகும்போது சட்ட உதவிக்கு ஒருவா் இடம்பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் பெறப்படும் வாக்காளா் சோ்ப்பு விண்ணப்பங்களை பத்திரமாக பதிவு செய்ய வேண்டும்.
படிவங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஒரே மாதிரியான நடைமுறைகளை தமிழகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

