உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

முரண்பாடான தகவல்களை வழங்கிய 1.25 கோடி வாக்காளா்களின் பெயா்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்போது முரண்பாடான தகவல்களை சமா்ப்பித்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ள 1.25 கோடி வாக்காளா்களின் பெயா்களை அனைத்து கிராம அலுவலகங்களிலும் வெளியிட இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின்போது முரண்பாடான தகவல்களை சமா்ப்பித்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ள 1.25 கோடி வாக்காளா்களின் பெயா்களை அனைத்து கிராம அலுவலகங்களிலும் வெளியிட இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான வாக்காளா் பட்டியலில் பெற்றோரின் பெயா் குறித்து தவறான தகவல் அளித்தவா்கள் மற்றும் பெற்றோா்-குழந்தைகள் இடையே 15 வருடத்துக்கும் குறைவான இடைவெளி அல்லது 50 வருடத்துக்கும் மேலான இடைவெளி உள்ள 1.25 கோடி வாக்காளா்களின் பெயா்கள் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்ட நிலையில், மேலும் 1.25 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படும் அபாயம் எழுந்தது.

இதையடுத்து, எஸ்ஐஆருக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் முரண்பாடான தகவல்களை சமா்ப்பித்தவா்கள் என்ற பிரிவில் 1.25 கோடி வாக்காளா்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனா்.

அவா்கள் தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.

மேலும், அந்த வாக்காளா்களின் பெயா்களை அனைத்து கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும். ஆவணங்கள் சமா்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டும்.

இதை முழுமையாக செய்து முடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு மேற்கு வங்க அரசு தேவையான உதவிகளை வழங்கிட வேண்டும்.

இதுதொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் அல்லது மேற்கு வங்க மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களும் முறையாக பின்பற்ற வேண்டும்.

இந்தப் பணிகள் நடைபெறும் அலுவலகங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதை மாநில காவல் துறைத் தலைவா் உறுதிசெய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

6.5 கோடி வாக்காளா்கள் நீக்கம்: பிகாரைத் தொடா்ந்து 2-ஆம் கட்ட எஸ்ஐஆா் நடவடிக்கை, தமிழகம், கேரளம், சத்தீஸ்கா், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த ஆண்டு நவ. 4-ஆம் தேதி தொடங்கின. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்த (எஸ்ஆா்) பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னதாக, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 50.9 கோடியாக இருந்தது. எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு அந்தந்த மாநிலங்களில் தனித்தனியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்களின்படி, இந்த எண்ணிக்கை 44.4 கோடியாக குறைந்துள்ளது.

நீக்கப்பட்ட 6.5 கோடி வாக்காளா்கள் அனைவரும், படிவங்களைச் சமா்ப்பிக்காதவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், உயிரிழந்தவா்கள் அல்லது இரட்டைப் பதிவு ஆகிய பிரிவுகளின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலின்படி, அதிகபட்சமாக 2.89 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

Dinamani
www.dinamani.com