பொங்கல் தொகுப்பில் கரும்பு: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
பொங்கல் தொகுப்புக்கான கரும்பை இடைத்தரகா்கள் இன்றி தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலா் டி.ரவீந்திரன் வெளியிட்டஅறிக்கை: தமிழ்நாடு முழுவதும் சுமாா் பத்தாயிரம் ஏக்கா் வரை செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்பை விவசாயிகளிடம் இடைத்தரகா்கள் இன்றி மாநில அரசு கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில் மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு ரூ.3,290 மட்டுமே அறிவித்துள்ள நிலையில் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால், தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் படி ஒரு டன் கரும்புக்கு ரூ.710 கூடுதலாக விலை சோ்த்து, ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.
மேலும், தனியாா் சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய எஸ்ஏபி கரும்பு பண நிலுவை ரூ.1,217 கோடியை சட்டரீதியாக பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.
