அமைச்சா் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு: ஏப்.7-இல் இறுதி விசாரணை
சென்னை: வனத் துறை அமைச்சா் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை, இறுதி விசாரணைக்காக ஏப். 7-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 1996-2001 ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ரூ.1 கோடியே 36 லட்சம் அளவுக்கு, அதாவது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக, 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு 2023-ஆம் ஆண்டு வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 172 சாட்சிகள் மற்றும் 381 ஆவணங்களை ஆய்வு செய்த வேலூா் நீதிமன்றம் வழக்கு மாற்றப்பட்ட 4 நாள்களில் விசாரித்து குற்றச்சாட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை எனக் கூறி, க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2023-ஆம் ஆண்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இறுதி விசாரணை ஏப். 7-இல் தொடங்கி ஏப். 17 வரை நடைபெறும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தாா்.