
நமது நிருபர்
தமிழக சட்டப்பேரவையில் மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது, அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் வாதங்களை வியாழக்கிழமைக்கு (பிப். 6) மீண்டும் ஒத்திவைத்தது.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023-இல் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
வாதம் விவரம் வருமாறு: தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் வைத்திருக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். திருப்பி அனுப்பும் மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பும்போது அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுபோன்று செய்யாதபட்சத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புமுறையே தோல்வியுறுகிறது.
கடந்த 2020, ஜன.13 முதல் 2023 ஏப். 20 வரை ஆளுநருக்கு 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அவர் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். அதை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நிலையில், அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
அரசமைப்புச் சட்டம் 200-இன்படி அவர் அனுமதி தராமல் வைத்திருக்க முடியாது. அவர் விதியின்படி இதைச் செய்யவில்லை என இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அதேபோன்று, அமைச்சர் ஒருவர் உறுதிமொழி எடுக்கச் செல்லும்போதும் அதைச் செய்துவைக்காமல் ஆளுநர் மறுத்தார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தை அணுகியபிறகு ஆளுநருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
ஆளுநர் என்பவர் பொதுவாக அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்றவராக இருப்பவர், அமைச்சரவைக்கு உதவுபவராக இருக்க வேண்டும் என அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது. ஒரு மசோதாவுக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கவில்லையெனில், இரண்டாவது முறையாக அது அனுப்பி வைக்கப்படும்போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஜே.பி. பார்திவாலா, "உங்கள் வாதத்தின்படி அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் அனுப்பியிருக்கக் கூடாது என்கிறீர்கள். ஆளுநர் ஏன் மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார் என்று விளக்கம் அளிக்க வேண்டும்' என இரு தரப்பையும் கேட்டுக்கொண்டார்.
மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, "அரசமைப்பின் 200-ஆவது விதியின்படி ஆளுநர் செயல்பட்டிருக்க வேண்டும்' என பதிலளித்தார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் ஆர். வெங்கடரமணி, மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரும் விவகாரத்தில் அவர் வசம் தற்போது மசோதா எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறினார். துணைவேந்தர்கள் விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்படாததால் அதைப் பெற்று விரிவான பதிலைத் தெரிவிப்பதாகவும் தலைமை சட்ட ஆலோசகர் தெரிவித்தார்.
இதையடுத்து, இருதரப்பு வாதங்களை மீண்டும் தொடரும் வகையில் வரும் வியாழக்கிழமைக்கு இந்த வழக்கை ஒத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.