இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது: சி.வி. சண்முகம்

இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது என்று சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சி.வி. சண்முகம்.
சி.வி. சண்முகம்.
Updated on
2 min read

சென்னை: குமாஸ்தா செய்யும் வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. திருத்தங்களை, மாற்றங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி. ஆனால் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார்.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், சி.வி. சண்முகம் கூறுகையில், குமாஸ்தா வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஒரு கட்சியில் ஏற்படும் திருத்தங்களை, மாற்றங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி. ஒரு கட்சிக்குள் ஏற்படும் விவகாரங்களில் ஆட்சேபனை இருப்பின் அதை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனுதாரர் சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினர் அல்ல. அதிமுக உறுப்பினர் என்ற போர்வையில் தாக்கல் செய்த மனு போலியானது. இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மீது தேர்தல் ஆணையத்துக்கு இருப்பது இரண்டே இரண்டு அதிகாரம் தான். 29 ஏ-ன் கீழ் ஒரு கட்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் அனைத்து விதிகளும், கொள்கைகளும் முறையாக இந்திய அரசியல் அமைப்புக்கு உள்பட்டு இருக்கிறதா, கட்சி ஒழுங்காக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அங்கீகரிக்க வேண்டும்.

29 ஏ- பிரிவு 9ன் படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கம், அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை, பொறுப்பாளர்கள் மாற்றங்கள் உடனடியாக அது தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அதனை பதிவு செய்து கொள்ள வேண்டியதுதான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம்.

அதுசரியானதா என்பதையெல்லாம் பார்க்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. அதன் மீது சந்தேகம் இருந்தால் அதனை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்குத்தான் உண்டு. இதுபோன்ற இரண்டு அதிகாரங்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இல்லாத அதிகாரத்தை தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்டதால்தான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்து விளக்கம் கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் சி.வி. சண்முகம்.

வழக்கின் பின்னணி?

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என சூரியமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் வா.புகழேந்தி, வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் சூரியமூா்த்தி ஆகியோா் சாா்பில் தோ்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ஓ.பன்னீா்செல்வம், அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் ஆகியோரும் தோ்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினா்.

இதற்கிடையே, சூரியமூா்த்தி தோ்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ததற்கு எதிராக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், அதிமுக உறுப்பினராக அல்லாதவா் எப்படி தோ்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? எனவே, அந்த மனுவை தோ்தல் ஆணையம் நிராகரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தோ்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் ஆகியோா் அமா்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவீந்திரநாத் சாா்பில், ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டு எதிரணி ஒன்று உள்ளது என தோ்தல் ஆணையத்துக்கு தெரியவந்தாலே, தாமாக முன்வந்து அக்கட்சியின் சின்னம் தொடா்பாக விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது”என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டத்துக்கு உட்பட்டுதான் தோ்தல் ஆணையத்தால் விசாரிக்க முடியும். மாறாக, நீதிமன்றம் போல பலருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க முடியாது. குறிப்பாக, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நபா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடியாது. சின்னம் தொடா்பான விவகாரத்தில் இல்லாத அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தோ்தல் ஆணையத்தால் விசாரணை நடத்த முடியாது என்று வாதிடப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தோ்தல் ஆணையம் தரப்பில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை. தனக்கு ஆதரவு நீடிக்கிறது. தோ்தல் நெருங்கும் நேரத்தில் சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்”என்று வாதம் முன்வைக்கப்பட்டது. ரவீந்திரநாத் சாா்பில், “அதிமுக உறுப்பினா்களில் பெரும்பாலானோா் ஓ.பன்னீா்செல்வம் பக்கம் உள்ளனா். அதனால் விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது”என்று கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கின் தீா்ப்பை வரும் பிப். 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com