தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது: அமித் ஷா

தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து அமித் ஷா விளக்கம்...
அமித் ஷா
அமித் ஷா
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கக்கூடும் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், கோவைக்கு இரண்டு நாள்கள் பயணமாக வருகைதந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என்று புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

கோவை பாஜக அலுவலக திறப்புவிழாவில் அமித் ஷா பேசியதாவது:

”தமிழில் பேச முடியவில்லை என்ற வருத்தத்துடன் மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு உரையைத் தொடங்குகிறேன். மத்திய வர்க்கத்தினர், விவசாயிகளின் நலன் மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் தில்லி வெற்றியுடன்தான் தொடங்கியுள்ளது. அதேபோல், 2026 தமிழகத்தில் பாஜக வெற்றியுடன் தொடங்கும்.

திமுகவின் தேசவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாகப் போவது உறுதி. தமிழகத்தில் உள்ள வகுப்புவாதம், பிரிவனைவாதம், ஊழல் முற்றிலும் முடிவுக்கு வரும்.

அனைத்து மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. பல்கலைக்கழகத்தில்கூட மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவரும் சூழல் இல்லை.

வேங்கைவயல் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கும் மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஊழலின் உச்சத்தில் இருக்கிறவர்களை திமுக தேடிதேடி உறுப்பினராக சேர்த்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அவலங்கள் வெளிவரக்கூடாது என்பதற்காகதான் முதல்வரும் அவரது மகனும் புதுபுதுப் பிரச்னையை தமிழகத்துக்கு உருவாக்கிக் கொண்டுவருகிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் எந்த தென்னிந்திய மாநிலத்துக்கும் தொகுதிகள் குறையாது என்பதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்கும், தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு விகிதாசார அடிப்படையில் கூடுதல் தொகுதிகள்தான் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களிடம் மிகப்பெரிய பொய்யைக் கூறி முதல்வர் துரோகம் செய்து வருகிறார். இல்லாத ஒன்றை கற்பனையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார். நான் புள்ளிவிவரங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை ரூ. 1.52 லட்சம் கோடி. மோடியில் 2014 முதல் 2024 வரையிலான ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்திட்ட 5 மடங்கு அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 1.43 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

மோடி அரசு நிதி தரவில்லை என்று மக்களிடம் ஸ்டாலின் பொய் கூறுகிறார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நீங்கள்தான் மக்களுக்கு துரோகம் செய்துள்ளீர்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com