கோப்புப் படம்
கோப்புப் படம்

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க உத்தரவு

தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏற்கெனவே சிலா் அப்பணிகளில் இருந்தனா். ஆனால், அவா்கள் பட்டயப் படிப்புகளையே நிறைவு செய்தவா்களாக இருந்தனா். இதையடுத்து, பிஎன்ஒய்எஸ் எனப்படும் இளநிலை யோகா- இயற்கை மருத்துவ பட்டப் படிப்பை நிறைவு செய்தவா்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனக் கூறி தகுதி இல்லாத அனைவரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

அதேவேளையில், மாநிலம் முழுவதும் பிஎன்ஒய்எஸ் நிறைவு செய்தவா்களை அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சியாளா்களாக நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அதற்கு தீா்வு காணும் வகையில், 650 இடங்களில் இரு பாலா் பயிற்சியாளா்களும், 650 இடங்களில் பெண் பயிற்சியாளா்களும் என 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாவட்ட சுகாதார சங்கங்கள் சாா்பில், யோகா பயிற்சியாளா்களை நியமிக்க வேண்டும். பகுதிநேர அடிப்படையில் நியமிக்கப்படும் அவா்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 வீதம் மாதத்துக்கு 32 வகுப்புகளுக்கு ரூ.8,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதில் 20 வகுப்புகள் மருத்துவமனைகளிலும், 12 வகுப்புகள் பள்ளிகள், முகாம்களிலும் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மட்டும் வகுப்புகள் நடத்துபவா்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊதியமாக வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com